×

அந்தியூர் அருகே அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கும் குட்டையூர் பழங்குடியின கிராம மக்கள்

*கரடு முரடான மலைப்பாதையில் 10 கிமீ நடந்து சென்று எம்எல்ஏ ஆய்வு

அந்தியூர் : ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் 33 மலை கிராமங்கள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள இந்த மலை கிராமங்களில் சுமார் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.இவர்களின் பிரதான தொழிலாக விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு இருந்து வருகிறது. பர்கூர் மலைப்பகுதியானது, கர்நாடக எல்லையை ஒட்டி உள்ளது. தமிழ்நாடு- கர்நாடக எல்லையை பிரிக்கும் பாலாற்றின் அருகே தமிழக வனப்பகுதிக்குள் குட்டையூர், மட்டிமரத்தள்ளி மற்றும் வேலம்பட்டி ஆகிய 3 மலைக் கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 1500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர்.

குறிப்பாக, கடைக்கோடியில் உள்ள குட்டையூர் மலை கிராமத்தில் இருந்து மருத்துவ தேவைக்கும், அரசு சார்ந்து பணிகளுக்கும் இவர்கள் பாலாற்றை கடந்து கர்நாடகவிற்குள் சுமார் 50 கிமீ பயணித்து தமிழக பகுதிக்கு வந்து, அங்கிருந்து சுமார் 60 கிமீ பயணம் என மொத்தம்‌ 110 கி.மீ தூரம் பயனித்து அந்தியூர் வர வேண்டிய நிலை உள்ளது.

இதனால், இம்மலை கிராமத்தில் உடல் நலக்குறைவு ஏற்படும் மக்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க முடியாத நிலையும், அரசு சார்ந்த உதவிகள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அங்கு வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில்,“எந்த ஒரு அடிப்படை வசதியும் இன்றி கர்நாடக எல்லையோரம் தவித்து வருகிறோம். மருத்துவ தேவைக்கோ, அரசு உதவிக்கோ நாங்கள் செல்ல வேண்டுமென்றால் அந்தியூர் தான் செல்ல வேண்டும். ஆனால், அதற்கு எங்களுக்கு முறையான சாலை வசதி கிடையாது.

இங்கு ஓடும் பாலாற்றை கடந்து தான் கர்நாடகாவுக்குள் சென்று, அங்கிருந்து அந்தியூர் வர வேண்டும். பாலாற்றில் அதிக தண்ணீர் வந்துவிட்டால் ஆற்றைக் கடக்க முடியாது. நாங்கள் வீடு கட்ட வேண்டும் என்றாலும் ஜல்லி, மணல், கம்பி இவற்றை கர்நாடகா வழியாகத்தான் கொண்டு வர வேண்டும். ஆனால், அதற்கு கர்நாடக வனத்துறையினர் அனுமதி மறுக்கின்றனர்.

இதுபோன்ற சூழ்நிலையில் வாழ்ந்து வரும் தங்களுக்கு சாலை வசதி, பேருந்து வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை தமிழக அரசு செய்து கொடுக்க நடவடிக்கை வேண்டும்.
இங்குள்ள பழங்குடியினர் பள்ளியில் 8ம் வகுப்பு வரை மட்டுமே உள்ளது. 9, 10ம் பயில வேண்டும் என்றால் பர்கூர் அரசு பள்ளிக்கோ அல்லது அந்தியூர் தான் வர வேண்டும். குறிப்பாக பெண் குழந்தைகள் 8வது முடித்தவுடன் இங்கு சென்று படிக்க வேண்டும் என்றால் விடுதியில் தங்கிதான் படிக்க வேண்டும்.

சில பெற்றோர்கள் விடுதியில் குழந்தைகளை சேர்த்து விடுகின்றனர். சில பேர் தங்களது குழந்தைகளை 8ம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை நிறுத்தி விடுகின்றனர். எனவே, இங்கேயே 10ம் வகுப்பு வரை கல்வி பயிலும் வகையில் பள்ளியை தர உயர்த்தி தர வேண்டும்.இதற்கிடையே குட்டையூரில் இருந்து சுமார் 10 கிமீ தொலைவில் உள்ள வனச்சாலை மூலம் ஆலசொப்பனட்டி என்ற கிராமத்தை அடைய முடியும். அங்கிருந்து மருத்துவ தேவைக்கு ஓசூர் என்ற மலை கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.

இந்த வழியாக அந்தியூர் சென்றடைய 60 கிமீ தூரம் மட்டும் பயணித்தால் போதும். கர்நாடகத்திற்குள் செல்ல வேண்டியதில்லை. எனவே, இச்சாலையை அமைத்தால் குட்டையூர், மற்றும் மட்டிமரத்தல்லி கிராம மக்கள் அந்தியூருக்கு எளிதாகவும், விரைவாகவும் வரமுடியும். சாலை அமைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி வெங்கடாசலத்திடமும் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து கடந்த 22ம் தேதி காலை ஆலசொப்பனட்டி கிராமத்திற்கு சென்ற எம்எல்ஏ அந்தியூர் ஏ.ஜி. வெங்கடாசலம், அங்கிருந்து 10க்கும் மேற்பட்ட மலைக்கிராம மக்களோடு வனத்திற்குள் கரடு முரடான பாதையில் சுமார் 10 கிமீ தூரம் நடந்து சென்றார். குட்டையூர் மக்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும் அரசு வழங்கும் அனைத்து திட்டங்களும் கிடைக்கிறதா? என கேட்டறிந்த எம்எல்ஏ, நீண்ட கால கோரிக்கையான சாலை அமைப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்துச்சென்று விரைவில் சாலை அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உறுதியளித்தார். காலை 9 மணிக்கு துவங்கிய நடைபயணம் மாலை 4 மணிக்கு முடிந்தது. இவருடன் அடர்ந்த வனப்பகுதியின் மத்தியில் கரடு முரடான சாலைகளில் நடந்து 10 கிமீ தூரம் நடந்து சென்ற அந்தியூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். சக்திகிருஷ்ணன் மற்றும் மருத்துவ குழுவினர் மலைக் கிராம மக்களுக்கு மருத்துவ பரிசோதனைகளும், மருந்துகளும், ஆலோசனைகளும் வழங்கினர்.

The post அந்தியூர் அருகே அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கும் குட்டையூர் பழங்குடியின கிராம மக்கள் appeared first on Dinakaran.

Tags : Andhiyur ,MLA ,Anthiyur ,Anthiyur, Erode district ,Kuttayur ,Dinakaran ,
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு :...